டில்லி
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி சனாதனம் பற்றி தவறாகப் பேசுவோருக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர்.
சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாகப் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சனாதனத்தைத் தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று டில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா-பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.