சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட,  இந்திய  இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக  தர்மன் சண்முகரத்னம்  சிங்கப்பூரின் 9வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபராக உள்ள ஹலிமாவின் பதவிக்காலம்  செப்டம்பர்  13ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.  இதன் காரணமாக, அங்கு அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.  இதற்கிடையில், சிங்கப்பூரில், இந்த முறை முதன் முதலாக வெளிநாடு வாழ் சிங்கப்பூர்காரர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு இருந்தது.  அதைத்தொடர்ந்து ஆகஸ்டு 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, விறுவிறுப்பான வாக்குச்சேகரிப்பு நடைபெற்றது. செப்டம்பர் 1  வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் இலங்கையை சேர்ந்த தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம் , இங் கொக் சொங் , டான் கின் லியான் ஆகியோர் 3 பேர் இறுதி  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்  இரவு 12.30 மணியளவில் வெளிவந்தன.   அதில் தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று மற்ற இரு வேட்பாளர்களை காட்டிலும் அபார வெற்றி பெற்றார். தர்மன் சண்முகரத்னத்தை  எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங்கிற்கு 16 விழுக்காடு வாக்குகளும்  டான் கின் லியானுக்கு 14 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தர்மன் சண்முகரத்னம்  சிங்கப்பூரின் 9வது அதிபராக  செப்டம்பர் 14ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.