டெல்லி: மத்தியஅரசு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மக்களிடையே மோடி அரசு போலியான நல்லெண்ணத்தை காட்ட வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், மத்தியஅரசு ரூ. 200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ200 குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014ம் ஆண்டு, ரூ.417ஆக இருந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ.1,118 ஆக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை கூடுதலாக ரூ.800 உயர்த்தியது பாஜக அரசு இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது 5 மாநில சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு, ரூ.200 குறைத்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
சமையல் சிலிண்டர் விலையை குறைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என மோடி அரசு நினைக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சித்துள்ளார். சிலிண்டர் விலையை திடீரென குறைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. ரூ.200க்கு விற்க வேண்டிய சிலிண்டர் விலையை ரூ.1200 வரை உயர்த்திவிட்டு, தற்போது விலை குறைப்பதாக நாடகமாடுகிறது மத்திய பாஜக அரசு என்றுள்ளார்.
140 கோடி இந்தியர்களை ஒன்பதரை வருடங்களாக சித்திரவதை செய்துவிட்டு, “தேர்தல் லாலிபாப்களை” கைமாறுவது பலிக்காது என்பதை பாஜக அரசு தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பத்தாண்டு கால பாவங்கள் கழுவப்பட முடியாதது. பிஜேபியால் அமல்படுத்தப்பட்ட பணவீக்கத்தை எதிர்கொள்ள, பல மாநிலங்களில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ₹ 500 சிலிண்டர்களை வழங்கப் போகிறது. ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் ஏற்கனவே இதை அமல்படுத்தியுள்ளன.
2024ல், கஷ்டத்தில் இருக்கும் நாட்டு மக்களின் கோபத்தை ரூ. 200 மானியத்தால் குறைக்க முடியாது என்பதை மோடி அரசு அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவைப் பற்றிய பயம் நல்லது,
மோடி அவர்களே! பொதுமக்கள் முடிவு செய்து விட்டனர். பணவீக்கத்தை முறியடிக்க, பா.ஜ.க.வுக்கு வெளியேறும் கதவை காட்டுவதுதான் ஒரே வழி என்று.’ என தெரிவித்துள்ளார்.