டில்லி

நேற்று 60 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன/

நல்லாண்டி, மாதவன், ஷ்ரேயா கோஷல்

நேற்று பொழுதுபோக்கு பட தேர்வுக்குழு தலைவர் கேத்தன் மேத்தா, பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்களின் (குறும்படம், ஆவணப்படங்கள்) தேர்வுக்குழு தலைவர் வசந்த் எஸ்.சாய் உள்ளிட்டோர் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை அறிவித்தனர்.

சிறந்த படமாக நடிகர் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி- நம்பி விளைவு’ தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த படத்தின் இந்தி மொழி பதிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த படத்துக்கு தங்கத்தாமரை விருதும், ரூ.2½ லட்சம்    ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த பொழுதுபோக்கை வழங்கிய பிரபல படமாக ஆர்.ஆர்.ஆர். படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆஸ்கார் விருதுகளை வென்ற திரைப்படத்துக்காக தங்கத்தாமரை விருதும், ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

ஆர் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த பின்னணி பாடகர், சிறந்த இசை, நடனம், சண்டைப்பயிற்சி ஆகிய பிரிவுகளிலும் விருதை வென்றுள்ளது.

புஷ்பா-1 தெலுங்கு படத்துக்காக நடிகர் அல்லு அர்ஜூன் சிறந்த நடிகராகன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவருக்கு வெள்ளித் தாமரையும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

சிறந்த நடிகைக்கான விருது, கங்குபாய் கத்தியாவாடி என்கிற இந்தி படத்துக்காக நடிகை அலியாபட்டுக்கும், மிமி என்கிற இந்தி படத்துக்காக நடிகை கீர்த்திசனோனுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  வெள்ளித் தாமரையையும், ரூ.50 ஆயிரத்தையும் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

சிறந்த இயக்குனருக்கான விருது கோதாவரி என்கிற மராத்தி மொழி படத்துக்காக இயக்குனர் நிகில் மகாஜனுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை புஷ்பா-1 படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத், ஆர்.ஆர்.ஆர். படத்துக்காக எம்.எம்.கீரவாணி ஆகியோர் பெறுகிறார்கள்.

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு… நாட்டு…’ பாடலுக்காக, படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருதை பெற்றிருந்தார்.

தற்போது சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் கீரவாணிக்கு பெற்றுத் தந்துள்ளது.

இவர் தமிழில் மரகதமணி என்ற பெயரில் ‘அழகன்’, ‘நீ பாதி நான் பாதி’, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’, ‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘பிரதாப்’, ‘கொண்டாட்டம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்..

இந்த ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படங்களுக்கான நர்கீஸ் விருதுக்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்துக்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை தமிழ் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் விருதுகள் கிடைக்கவில்லை. சிறந்த பொழுதுபோக்கு படங்கள் பிரிவில் மொழிவாரியான படங்களில் எம்.மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படம் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்துக்கு தங்கத்தாமரையும், ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

சிறப்பு குறிப்பீடு பிரிவிலும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள அந்த படத்தில் விவசாயியாக நடித்த, சமீபத்தில் இறந்த நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பொழுதுபோக்கு படப்பிரிவில் சிறந்த பின்னணி பாடகி விருது இரவின் நிழல் படத்தின் மாயவா சாயவா… பாடலுக்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட உள்ளது. அவருக்கு வெள்ளித்தாமரை விருதும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர பொழுதுபோக்கு அல்லாத படங்கள் பிரிவில் பி.லெனின் இயக்கத்தில் உருவான சிற்பிகளின் சிற்பங்கள் படம் சிறந்த கல்விப்படத்துக்கான விருதை பெற இருக்கிறது. அதைப்போல கருவறை படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சான்றிதழுக்காக மட்டும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதக்கமும், ரொக்கப்பரிசும் கிடைக்காது.  ஸ்ரீகாந்த் தேவா இந்த பிரிவில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.