சென்னை
சென்னை அம்பத்தூரில் பிரியாணிக் கடையில் ஏற்பட்ட தகராற்றில் ஒரு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் உள்ள ரெட்டி தெருவைச் சேர்ந்த 23 வயதாகும் பாலசந்திரன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இவர், மண்ணூர்பேட்டையில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்கச் சென்றார்.
அதே கடைக்குப் பிரியாணி வாங்க வந்த 3 பேருக்கும், பாலசந்திரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட் வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
தகராற்றின் போது 3 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலசந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இந்த தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் எஸ்டேட் காவல்துறையினர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய பாலச்சந்திரனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பாலச்சந்திரன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் எஸ்டேட் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்துத் தப்பி ஓடிய 3 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை முன்விரோதம் காரணமாக முன்கூட்டியே திட்டமிட்டு பாலச்சந்திரன் வம்புக்கு இழுத்து நடந்ததா? அல்லது கடையில் பிரியாணி வாங்கும்போது ஏற்பட்ட தகராற்றில் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.