சென்னை: சென்னையை சுத்தமாக்கும் வகையில், ‘Call for Action’ பிரசாரத்தின் கீழ் புதுப்பட்டை கூவம் பகுதியில் 400 டன் கழிவுகளை சென்னை மாநகராட்சி அகற்றி இருப்பதாக தெரிவித்து உள்ளது.
நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் சென்னை மாநகராட்சி ‘Call for Action’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக, சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் தீவிர தூய்மைப் பணியாக மாஸ் கிளீன்ங் திட்டத்தினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் புதுப்பேட்டை கூவம் ஆற்றில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு துவக்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசியவர், ‘’சென்னை மாநகரம் மிகப் பெரிய மாநகரமாகவும், உலகத்தரம் வாய்ந்த சிறப்புமிக்க இடங்களைக் கொண்டதாக உள்ளது. ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களும் இங்கு உள்ளது. இந்த பகுதியில் தூய்மைப் பணி மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கையில் இறங்கி பணிகள் மேற்கொள்ளுதல் (Call for Action) என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள், நீர்நிலைகளின் ஓரங்களில் உள்ள கழிவுகளை அகற்றுதல், பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்தல், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக குப்பை தேங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட இடங்களில் இந்த தீவிரத் தூய்மைப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக சாலை மற்றும் தெருவோரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குப்பைக் கொட்டும் வளாகங்களில் வைக்கப்படும்.
இந்த பயன்பாடற்ற கார்களில் மழைநீர் தேங்கும் போது டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. ஆரம்ப நிலையிலேயே கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பயன்பாடற்ற வாகனங்களை உரிமையாளர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும். பொது மக்களும் இந்தப் பணிகளில் இணைந்து செயல்பட்டு மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், ‘செயல்களுக்கான அழைப்பு ‘Call for Action’ ’ பிரச்சாரத்தின் கீழ், சென்னை மாநகராட்சி குப்பை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, புதுப்பேட்டையில் 1 கிமீ தெற்கு கூவம் சாலையில் ஆற்றங்கரை மற்றும் நடைபாதைகளில் படுக்கைகள், சோபா உள்ளிட்ட 400 டன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. ஆற்றின் கரையோரம் நீண்ட காலமாக குப்பை வியாபாரிகளின் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்றங்கரை மற்றும் நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள கார்களை 15 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என விற்பனையாளர்களுக்கு குடிமைப்பொருள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே, சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் கூவம் ஆறு சீரமைப்பு திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக பல 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக கூவம் ஆற்றின் கரையோரங்களில் கொட்டப்பட்டிருந்த குப்பை கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி, ஆற்றை தூய்மைப்படுத்தியது. பின்னர் பல கோடி ரூபாய் செலவில், பொதுமக்கள், தொழில்நிறுவனங்கள் கூவம் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் சுவர் எழுப்பி, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு யாரும் குப்பை கொட்டுவதில்லை.
ஆனால் சமீப காலமாக புதுப்பேட்டையை ஒட்டிசெல்லும் கூவம் ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளிலும் ஏராளமான குப்பை கொட்டப்பட்டுள்ளன. அதுபோல மாநகரம் முழுவதும் கால்வாய்கள் செல்லும் வழிகள், அதன் கரையோரம் குப்பை கூளங்கள், கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீண்டும் கூவம் ஆற்று மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார்கள் கூறி வருகின்றன.
இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தற்போது ‘Call for Action’ என்ற திட்டத்தை அறிவித்து, தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறது.