தேசிய மருத்துவ காப்பீட்டு திட்ட தரவுகளில் மோசடி நிகழ்ந்துள்ளதாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.5 லட்சம் பயனர்கள் ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பயனாளிகளை அடையாளம் காண போதுமான சரிபார்ப்பு கட்டுப்பாடுகள் இல்லாமல் போனதே இதற்கு காரணம் என்றும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9999999999 என்ற உபயோகத்தில் இல்லாத மொபைல் எண்ணை பயன்படுத்தி 7.5 லட்சம் பயனர்களின் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

8888888888 என்ற உபயோகமில்லா மொபைல் எண்ணை பயன்படுத்தி 1.4 லட்சம் பேரும் 9000000000 என்ற எண்ணை பயன்படுத்தி 96000 பேரும் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் உபயோகத்தில் இல்லாத வேறு 20 மொபைல் எண்களைக் கொண்டு சுமார் 50000 பேர் பதிவு செய்துள்ளனர்.

மொத்தத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இதுபோன்ற உபயோகமில்லாத மொபைல் எண்ணை கொண்டு பதிவு செய்துள்ளது தணிக்கையின் போது தெரியவந்துள்ளது.

அடையாள அட்டை கொண்டு வராமல் வரும் பயனாளிகளை மொபைல் எண் மட்டுமே அடையாளம் காண உதவும். அடையாள அட்டையை தொலைத்த பயனாளிகளுக்கு அவர்களின் மொபைல் எண்ணும் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுப் பலன்கள் மறுக்கப்படுவதோடு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பதிலும் சிகிச்சை முடிந்து வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தவிர, தவறான பெயர்கள், பிறந்த தேதிகள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற பிழைகளால், “தகுதியற்ற பயனாளிகளின் பெயரில்” பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2018 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் மட்டும் 22.44 கோடி ரூபாய் தகுதியற்ற பயனாளிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 7 ஆதார் எண்களைக் கொண்டு 4,761 பயனர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

தவிர, 43,197 பயனாளி குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 முதல் 201 வரை உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.