பாலினமும் பிறப்புறுப்பும் இரண்டு தனித்துவமான கருத்தியல், பாலினத்தை தேர்வு செய்வது தனிநபரின் விருப்பத்தைப் பொறுத்தது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தெளிவற்ற பிறப்புறுப்புடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை தேர்வு செய்வது என்பது குழந்தையின் விருப்பத்தில் தலையிடுவதாக அமைந்துவிடும் என்றும் கூறியுள்ளது.

ஆணா பெண்ணா என்று தீர்மானிக்க முடியாத வகையில் பிறப்புறுப்பு தெளிவாக இல்லாத குழந்தையின் பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைக்க குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களின் உதவியை நாடினர்.

பாலினத்தை நிர்ணயிக்கும் சிகிச்சையை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து நீதிமன்றத்தின் உதவியை நாடிய பெற்றோர், Karyotype Report-46XX மருத்துவ பரிசோதனையில் குழந்தை பெண்ணாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதை அடுத்து குழந்தையின் பாலுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெண்ணுறுப்பாக மாற்ற நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி. அருண், “‘பாலினம் – பாலுறுப்பு’ (‘gender’ and ‘sex’) இரண்டும் தனித்துவமானவை. அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தெளிவற்ற பிறப்புறுப்பை பெண்ணாக மாற்றுவதன் மூலம் அதன் பாலினத்தை நீங்கள் மாற்றுவது அந்த குழந்தையின் விருப்பத்திற்கு மாறானதாக அமையலாம்.

குழந்தை வளர்ந்த பின் தனது அங்க அடையாளங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க கூடிய நிலையை அடையும் போது தான் பெண்ணாக மாற்றப்பட்டதை மறுத்தால் அது அவரது விருப்பத்திற்கு மாறாக அறுவை சிகிச்சை செய்ததாகி விடும்.

பாலினத்தை தேர்வு செய்வது என்பது தனி நபரின் விருப்பத்தைச் சார்ந்தது.

தவிர, Karyotype Report-46XX மருத்துவ பரிசோதனை அறிக்கை பெரும்பாலான அறுவை சிகிச்சைகளில் தவறாகவும் போயுள்ளது. தற்போது பெண் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும் பிறகு ஆணாக வளர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

எவ்வாறாயினும், முறையாக அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டால், அத்தகைய தலையீடு அனுமதிக்கப்படலாம் என்றும், பாலினத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்வதற்கான கோரிக்கைகளை ஆய்வு செய்யும் நிபுணர்களைக் கொண்ட மாநில அளவிலான பல்துறைக் குழுவை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடத் தொடரலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இரண்டு மாதங்களுக்குள் மனுதாரர்களின் குழந்தையை பரிசோதித்து, தெளிவற்ற பிறப்புறுப்பு காரணமாக குழந்தை ஏதேனும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கிறதா என்பதை முடிவு செய்யுமாறும், அந்தக் கேள்விக்கு உறுதியான பதில் கிடைத்தால் அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றம் கூறியுள்ளது.