சென்னை
அமலாக்கத்துறை சோதனையின் போது ஆவணங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் மறைக்க முயன்றதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் தேதி கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
சோதனையின் போது கிடைத்த கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம், 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சாமிநாதன் ஆவணங்களை மறைக்க முயற்சி செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சாமிநாதனின் உறவினர் சாந்தி ஆவணங்கள் இருந்த பையை எடுத்து சென்று அந்த பையை ஓட்டுநர் சிவாவிடம் கொடுத்ததும் சி.சி.டி.வி. மூலம் அம்பலமாகியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சாமிநாதனின் உறவினர் சாந்தி தொடர்புடைய இடங்களிலும். ஓட்டுநர் சிவா வீட்டிலும் நடத்திய சோதனையில் ரூ.22 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். சோதனைக்குச் சாமிநாதனின் உறவினரான சாந்தி சோதனைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும், ஓட்டுநர் சிவா தலைமறைவாக உள்ளார் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.