சென்னை: பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காலை உணவு சமைத்து எடுத்துச்செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திடீரென நேரில் சென்று சோதனையிட்டார்.
தமிழ்நாடு பள்ளிக்குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு வருவதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு சார்பில், காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ந்தேதி சேலத்தில், பமுதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1,547 அரசு ஆரம்ப பள்ளிகளில் முதல்கட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1,14,095 மாணவர்கள் பயனடைந்தனர். இதற்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த திட்டம் மாநிலம் முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக இந்த காலை சிற்றுண்டி திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மேலும் 500 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று உணவு எடுத்து செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.