டில்லி

புதிய விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதிய விமானங்கள் இறக்குமதி பற்றி கேள்வி  எழுப்பப்பட்டது.  இதற்கு விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாகப்  பதில் அளித்தார்

அமைச்சர் தாம் அளித்த பதிலில், ஏர் இந்தியா நிறுவனம் 480 விமானங்களையும், இண்டிகோ நிறுவனம் 500 விமானங்களையும் இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இறக்குமதிக்குத் தடையில்லா சான்று அளிக்கும் போது விமானங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் உறுதி செய்யப்படுவதாகவும், இதற்காக விமான நிறுவனங்கள் தங்கள் திட்டத்தை விமான நிலைய செயல்பாட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வி.கே.சிங் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.