காந்தி நகர்: குஜராத்தில் காதல் திருமணங்கள் செய்பவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில பாஜக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
காதல் திருமணத்தினால் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க பெற்றோரின் சம்மதம் தேவைப்படும் முறையை உருவாக்குவதற்கான சட்டம் கொண்டு வருவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயவும், திருமணத்திற்காக சிறுமிகள் தப்பிச் செல்லும் வழக்குகள் குறித்து ஆய்வு நடத்துமாறு மாநில சுகாதார அமைச்சர் பரிந்துரைத்துள்ளார் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்து உள்ளார்.
படிதார் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான சர்தார் படேல் குழுமம் ஞாயிற்றுக்கிழமை மெஹ்சானாவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில முதல்வர், காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற படிதார் சமூகத்தின் சில பிரிவினரின் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, காதல் திருமணம் அரசியல் சாசன ரீதியாக சாத்தியமானால், காதல் திருமணங்களில் பெற்றோரின் அனுமதியை கட்டாயமாக்கும் முறையின் சாத்தியக்கூறுகளை தனது அரசாங்கம் ஆய்வு செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும் சிறுமிகள் காதல் திருமணத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதுகுறித்து ஆய்வு செய்யுமாறு மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தன்னிடம் கூறியதாக தெரிவித்தவர், “(படேல்) என்னிடம் சிறுமிகள் ஓடிப்போகும் சம்பவங்களைப் பற்றி ஒரு ஆய்வை மேற்கொள்ளவும், அதனால் (கட்டாயம்) பெற்றோரின் சம்மதம் (காதல் திருமணங்களுக்கு) சாத்தியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறியவர், பெற்றோரின் சம்மதம் (திருமணங்களுக்கு) கட்டாயமாக்கப்படும் வகையில், சரியான நேரத்தில், அதற்கான சட்ட திருத்தம் உருவாக்கப்படும் என்றார்.
அரசியலமைப்பு காதல் திருமணத்தை ஆதரித்தால், பின்னர் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, சிறந்த முடிவைப் பெற முயற்சிப்போம்,” என்றார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது வெளியிட்ட பாமகவின் தேர்ல் அறிக்கையில், இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில், “சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்” என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.