சென்னை
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் தங்கை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 34) மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சைதாப்பேட்டையைச் சேர்ந்த டக்கா மணி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இமானுவேல் (11), சோபியா (7) என 2 பிள்ளைகள் உள்ளனர்.
டக்கா மணி இறந்துவிட்டதால் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த புவனேஷ் என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டு, அவருடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தார். ராஜேஸ்வரி ரெயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து குடும்பத்தைக் கவனித்து வந்தார். ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரெயில் நிலைய நடைமேடையில் 3 மாதங்களாகப் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவர் கடந்த 19-ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த போது. ரயில் இரவு 8.30 மணியளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றது. ராஜேஸ்வரி இறங்கி 1 மற்றும் 2-வது நடைமேடைக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து வந்த 4 மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்து நொடிப்பொழுதில் அந்த மர்மநபர்கள் தங்கள் கைகளில் வைத்திருத்த கத்தி மற்றும் அரிவாளால் ராஜேஸ்வரியைச் சரமாரியாக வெட்டிவிட்டு, அதே ரயிலில் ஏறி தப்பிச்சென்றனர்.
முகத்தில் 10 இடத்தில் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஸ்வரி உயிருக்குப் போராடினார். பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே காவலர், படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு ராஜேஸ்வரியை கொண்டு சென்றனர். ராஜேஸ்வரிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜேஸ்வரி கொலை தொடர்பாகத் தனிப்படை காவல்துறை விசாரித்து வந்தனர். சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.