சென்னை

பாதுகாப்புக்காக மின்சார ரயில்களில் பெண்கள் பெட்டியை நடுப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினசரி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடத்திலும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.  ரயில் நிலையங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை போல். நெரிசல் மிக நேரங்களில் திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

கடந்த 2-ந்தேதி சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண் இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இறங்கும்போது நடைமேடையில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்கள் பிரீத்தியின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரீத்தி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கைது செய்தனர்.  மேலும் தாம்பரம், ஆவடி வழித்தடங்களிலும் மின்சார ரயில் நிலையங்களிலும் திருட்டு சம்பவங்களும், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இச்சம்பவங்களைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்பாடு குறித்து சமீபத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள், ரயில்வே கோட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது மின்சார ரயில்கள் மற்றும் குறுகிய தூரத்திற்கு இயக்கப்படும் ரயில்களில் பெண்களுக்கான பெட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன்படி, பெண்களுக்கான பெட்டிகள் ரயில்களின் நடுப்பகுதியில் ஒரே பெட்டியாக ஒதுக்கீடு செய்தால் ரயில்வே பாதுகாப்புப் பணிக்கு வசதியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.