டில்லி
நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிதாய 2 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ள போதிலும் 30 நீதிபதிகள் மட்டுமே பணியில் இருந்தனர். மீதி 4 இடங்கள் காலியாக இருந்தன. தற்போது தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கட நாராயண பட்டி ஆகியோரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது. இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கடந்த புதன்கிழமை அறிவித்தார். நேற்று ,உஜ்ஜல் புயான் மற்றும் வெங்கட்டநாராயண பட்டி ஆகிய இருவரும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
நீதிபதி உஜ்ஜல் புயான் கடந்த 1964 ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்து கடந்த 2011-ம் ஆண்டு குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2022 ஜூன் 28-ம் தேதி முதல் தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி வெங்கட் நாராயண பட்டி கடந்த 1962-ம் ஆண்டு மே 6-ம் தேதி பிறந்து ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகக் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி நியமிக்கப்பட்டார். பிறகு கடந்த 2019-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அங்குக் கடந்த 2023 ஜூன் 1-ம் தேதி முதல் தலைமை நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.