மணிப்பூர் மாநில கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதை மத்திய மாநில அரசுகள் கண்டிக்காததை காரணமாக கூறி மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ஆர் வன்ரம்ச்சுவாங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் சமீபத்தில் வெடித்த இனக்கலவரத்தின் போது, 357 (முந்நூற்று ஐம்பத்தேழு) கிறிஸ்தவ தேவாலயங்கள், பாதிரியார்களின் குடியிருப்புகள் மற்றும் தேவாலயங்களுக்குச் சொந்தமான அலுவலக கட்டிடங்கள் மெய்டீய் போராளிகளால் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் எரிக்கப்பட்டதை மணிப்பூர் மாநில முதல்வர் கண்டிக்கவில்லை அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இம்பாலுக்கு வந்தபோது தேவாலயங்கள் எரிக்கப்பட்டது குறித்து எதுவும் பேசவில்லை.

மத்திய-மாநில பாஜக அரசின் இந்த மௌனம் கிருத்தவ தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டதை ஆதரிப்பதாக தோன்றுகிறது. கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவ மதத்துக்கும் இழைக்கப்படும் இந்த குற்றச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மிசோரம் மாநில பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன் என்று வன்ரம்ச்சுவாங்கா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கிருத்தவர்கள் அதிகம் வாழும் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொது சிவில் சட்டம் குறித்த பேச்சு இந்த பிராந்திய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து பாஜக துணை தலைவர் ராஜினாமா செய்திருப்பது பாஜக-வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் மணிப்பூர் விவகாரத்தில் அண்டை மாநில பழங்குடி மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவு பெருகிவருவதை அடுத்து இந்த விவகாரத்தில் பாஜக தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.