மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மாமன்னன், அதிகாரத்தின் அயோக்கியத்தனத்தை (படத்தில் கூறுவது போல) மேலோங்கிப் பிடிக்க துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை உணராத (கோழைக்கும்) இடையேயான போராட்டமே.
சேலம் மாவட்டத்தில் கீழ் சாதியை சேர்ந்த எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு), அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர். அவரின் மகன் வீரன் என்கின்ற அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை சண்டை பயிற்சி வாத்தியாராக வருகிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக வாரிசு அரசியல்வாதியாக மேல் சாதியைச் சேர்ந்த ரத்னவேல் என்ற கதாப்பாத்திரத்தில் வருகிறார் பஹத் ஃபாசில். கீர்த்தி சுரேஷ் கம்யூனிஸ்ட் தோழர் லீலாவாக, மற்றும் அதிவீரனோடு படித்த முன்னாள் மாணவியாக வருகிறார். ஏழை மாணவர்களுக்காக தாம் நடத்தும் இலவச பள்ளியை அதிகாரவர்க்கத்தினர் அடித்துநொறுக்க, பிரச்சினை அரசியலாகிறது. இந்த போராட்டத்தில் சாதி வெறி ஜெயித்ததா சமூகநீதிதி ஜெயித்ததா என்பதே‘மாமன்னன்’ படத்தின் திரைக்கதை.
ஒவ்வொரு இடத்திலும் தாம் நினைத்ததை வெகு நேர்த்தியாக ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் உதவியோடு காட்டியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கதாபாத்திரங்களை வரிசை படுத்துவதிலும், அவர்கள் தூக்கிப் பிடிக்கும் கொள்கைகளை காட்டும் போதும் நெறிகொண்டும் வெறிகொண்டும் சித்தரிக்கின்றார் இயக்குனர்.
‘எப்போதும் நின்று கொண்டு பேசாதீங்க… உட்கார்ந்து பேச பழகுங்க…’ என்று சமத்துவ எண்ணம் கொண்ட மாமன்னன் வடிவேலுதான் படத்தின் ஹீரோ. தன் மகனுக்கு நடந்த கொடுமைக்கு நீதியை பெற்றுத்தர முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ஏமாற்றத்துடனும், வலியுடனும் அவர் அழும் காட்சி மற்றும் தன்னை மண்ணு என்று அழைத்த ஊரார் முன் தன் மகனால் தான் மாமன்னன் என்று அழைக்கப் பெற்ற கதையை சொல்லும் போதும், தன் மனைவியிடம் தன் மகனை விட்டுக் கொடுக்காமல் தவறு அனைத்திற்கும் அவரே காரணம் என்று கூறும்போதும் திரையரங்கில் அனைவரையும் கலங்கடிக்கச்செய்கிறார்… மாமன்னன் வடிவேலு. ஒரு பக்கம் மாமன்னன் என்றால் மறு பக்கம் ரத்னவேலுவாக வரும் பஹத் ஃபாசில் மிரட்டியிருக்கிறார், ஆணவத்தின் உச்சம் சாதி வெறியின் ஊற்று. பஹத் ஃபாசில், ஜாங்கோ அன்செயின்ட் (Django Unchained) என்ற படத்தில் லியோனார்டோ டீ காப்ரியோவை நினைவுபடுத்திகிறார். இரண்டு நடிப்பு ஜாம்பவான்களுக்கு மத்தியில் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார் உதயநிதி. இவர்கள் மூவருக்காகவும் படத்தை ஒருமுறைக்கு மேல் பார்ப்பவர்கள் அதிகம் இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது.
கீர்த்தி சுரேஷ், லால், கீதா கைலாசம், விஜயகுமார், அழகம் பெருமாள், ரவீனா ரவி போன்ற எண்ணற்ற பாத்திரங்கள் அவரவர் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்கள. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு பெரிய பிளஸ், பல இடங்களில் …இசையே பேசுகிறது.
‘யார் ஜெயிச்சாங்கிறது முக்கியம் இல்ல, யார் பயந்தாங்கிறதுதான் முக்கியம்’, ‘நாலு பேரோட கொலை வெறி எப்படி 400 பேரோட மான பிரச்சினை ஆகும்’, ‘ஏழைகள் கோவப்படவே இங்க தகுதி தேவைப்படுது’ போன்ற கூர்மையான அரசியல்மிகு வசனங்கள் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. பஹத் ஃபாசில் ஒரு இடத்தில வடிவேலுவிடம்…”நான் இங்க சமூகநீதியை காக்க வரல …சாதிய காப்பாத்திட்டு என் புள்ள கிட்ட கொடுக்கணும்னு” சொல்லுவார். அடுத்த தலைமுறையினர் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும், இதில் சொல்லப்படும் அரசியலை புறிந்துகொள்ளவேண்டும்.
மாமன்னன் மொத்தத்தில் ஒரு சூப்பர் டூப்பர் சமூக நீதிப் படம். அனைவரும் திரையரங்கில் பார்த்து சிந்திக்க வேண்டிய ஒரு படம்.
பத்திரிகை டாட் காமின் மதிப்பெண்கள்: 4/5