டில்லி
பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய பா.ஜ.க. அரசின் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். நேற்று அவர் நாட்டில் மத்திய அரசு துறைகளில் காலியிடங்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து விட்டதாக சாடி உள்ளார்.
அவர் டிவிட்டரில் இந்தியில் வெளியிட்ட பதிவில்,
”மோடியின் அரசின் முன்னுரிமை, ஒரு போதும் காலியிடங்களை நிரப்புவதில் இருந்தது இல்லை. 2014-ம் ஆண்டுடன் (பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த காலகட்டம்) ஒப்பிடுகையில் மத்திய அரசில் (பாதுகாப்புத்துறை சாராத) சிவிலியன் பணிகளில் காலியிடங்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. எல்லாவற்றையும் சேர்த்து, மத்திய அரசுத் துறைகளில் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன.
மோடி அரசு, தலித்துகளுக்கு எதிரானது, பழங்குடியினருக்கு எதிரானது, பிற்படுத்தப் பட்டோருக்கு எதிரானது, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு எதிரானது. எனவேதான் அது காலி பணியிடங்களை நிரப்பாமல் இருக்கிறது.
சில ஆயிரங்கள் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமன ஆணைகளை வழங்கி, மோடி கைதட்டல்களைப் பெறுவதற்காக இளைஞர்களின் கண்களில் மண்ணைத் தூவுகிறார் மத்திய அரசு துறைகளில் அனுமதியளிக்கப்பட்ட இடங்களில், 2014-ம் ஆண்டு 11.57 சதவீதமாக இருந்த காலியிடங்கள், 2022-ம் ஆண்டு 24.3 சதவீதமாக இரு மடங்கு உயர்ந்து உள்ளது’
எனத் தெரிவித்துள்ளார்.