பாலசோர்
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று நடந்த ரயில் விபத்தில் பல தமிழ் பயணிகள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது/
நேற்று இரவு ஒடிசாவில் இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய விபத்து ஒடிசாவில் நடந்தது. இதில் ஒரு ரயில் தடம் புரண்ட மற்றொரு பெட்டியின் மீது மோதியதால் பல பெட்டிகள் விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.
பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது., கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது. மனித தவறுகள் காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பதை அறிய ரயில்வே முயன்று வருகிறது.
இவ்வாறு இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மூன்றாவது ரயிலாக அங்கு விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது. யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகளின் தடம் புரண்ட பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகி எதிர் பாதையில் விழுந்ததாக ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
3 ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டதில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தடம் புரண்ட பெட்டிகளுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளனர். உள்ளூர் வாசிகள் அவர்களை மீட்க அவசர படையினருக்கு உதவி வருகின்றனர். மீட்பு பணியில் ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் (ODRAF) நான்கு பிரிவுகளும், 60 ஆம்புலன்ஸ்களும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு விபத்துக்குள்ளான இரண்டு பயணிகள் ரயிலும் தமிழகம் வழியாகச் செல்லக்கூடிய ரயில்கள் என்பதால் தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டும் 800 பேர் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளதால் தமிழர்கள் அதிகம் பாதிப்படையவும் வாய்ப்புள்ள அச்சம் நிலவி வருகிறது.