பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி தொடர்ந்து வருகிறது.

கர்நாடகா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மை பெற்றது. முதல்வர் பதவியைக் கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம் பி .பாட்டில் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், புதிய முதல்வரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தைக் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வுக்கு வழங்கி கடந்த 14-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றினர்.  இதையொட்டி டில்லி சென்ற மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, வேணு கோபால், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

 ராகுல் காந்தி, கர்நாடகாவைச் சேர்ந்த‌ கார்கே தலைவராக இருப்பதால் அவரே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கட்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநில முதல்வர் விவகாரத்தில் இழுபறி குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ” முதல்வர் விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே யாரும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். அத்தகைய செய்திகளை பாஜகவினர் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். இப்போதிலிருந்து 48 முதல் 72 மணி நேரத்துக்குள் முதல்வர், அமைச்சரவை விவரம் அறிவிக்கப்படும்’ ‘எனத் தெரிவித்துள்ளார்.