ருத்ராட்சம் என்றால் என்ன? விவரங்கள்
திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே! ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில் மகா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படிச் செய்து இருந்தால் மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார்.
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம்.
ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு வகையில் ருத்ராட்சம் பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும், அது தோன்றிய வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமானது.
முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு நாரதா பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவனாகவும்,பிரம்மனிடம் வரம் பெற்றவனாகவும் இருந்தான்.அந்த கர்வத்தினால் சர்வ தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டினார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டோம்.
அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரேசக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களைக் காக்க திரிபுராசுரனை அழிக்கக் கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காகச் சிவபெருமான் (தியானம், தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார்.
அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார். பக்தியுடன் அதை அணிபவரை எப்பொழுதும் கண்போலக் காப்பாற்றுவார் . எனவே அனைவரும் ஒரு ஐந்து முகம் ருத்ராட்சம் கழுத்தில் எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.