சென்னை
சென்னையில் ரசாயனக் கற்களைக் கொண்டு பழுக்க வைத்த 16,209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று உணவுப் பாதுகாப்பு துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைப்பேசி செயலியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார். அவர் செய்தியாளர்களிடம், “பாதுகாப்பான உணவு என்கின்ற வகையில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் வழிகாட்டுதலின்படி, உணவு பாதுகாப்பு தொடர்பாக இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி, உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளைப் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
இந்த இணையதளம் இரு மொழி (தமிழ் & ஆங்கிலம்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக்கும் வகையில் ஸ்கிரீன் ரீடர் அணுகல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையைப் பற்றிய அனைத்துத் தகவல்கள் குறிப்பாக அனைத்து அமலாக்க அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள், உணவு ஆய்வகங்களின் முகவரிகள், அரசு உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களில் உணவு மாதிரி பகுப்பாய்வுக்கான கட்டண விவரம், சுகாதாரக் கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களின் தடை உத்தரவு, துறை ரீதியான உத்தரவுகள், நீதிமன்ற வழக்குகளின் உத்தரவு ஆகியவற்றைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளத்தில் பல்வேறு செய்திகள் உள்ளடக்கியிருக்கிறது.
அனைத்து வயதினருக்கும் ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை உட்கொள்வதால் உடல் நலக் குறைவு ஏற்படுகிறது என்பதை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் குறுகிய ஆசையின் காரணமாக வியாபாரிகள் வேகமாக பழுக்க வைத்து இலாபம் ஈட்ட வேண்டும் என்று இந்த தவற்றைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 4122 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 16,209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.9.2 லட்சமாகும். உண்மையில் இது வருத்தத்திற்குரிய செய்தி என்றாலும் பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல் என்பதால் வேறு வழியின்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.