சென்னை
மின் கட்டணம் ரூ.1000க்கு மேல் இருந்தால் இணையத்தில் மட்டுமே செலுத்த முடியும் எனத் தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது/
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் இருந்து மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரூ.5 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் இணையம் அல்லது வங்கி வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) அல்லது காசோலை வழியாகச் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. அதைவிட குறைந்த தொகையைச் செலுத்த வேண்டியவர்கள் இணையம் மட்டுமின்றி நேரடியாகவும் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்டர்களில் நேரடியாகச் சென்று மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் பணிச் சுமையைக் குறைப்பதற்காக, நுகர்வோர்களால் கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் என்பது 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாகக் கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அது ரூ.1,000-மாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த பரிந்துரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, மின்சார வாரியம் சார்பில் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் மின்வாரிய அலுவலகங்களில் செலுத்தக்கூடிய அதிகபட்ச கட்டணம் ரூ.1,000 ஆகக் குறைக்கப்பட உள்ளது.