தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், புள்ளிக்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக 66 இடங்களில் ஆழ்துளையிட்டு கனிம வளம் குறித்து ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள இருக்கிறது.
இதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டிருப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
கேடுகெட்ட ஒன்றிய பாஜக அரசு நமது #டெல்டா பகுதியை சீரழிக்க துடிக்கிறது !!! #மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில், ஒரு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், நிலக்கரி திட்டத்தை கொண்டுவர துடிக்கிறது !!! எக்காரணத்தை கொண்டும் இதை #மன்னார்குடி யில் / #டெல்டா வில் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம்… pic.twitter.com/zdSmllydoj
— Dr. T R B Rajaa (@TRBRajaa) April 4, 2023
நெல் வயல்களை நிலக்கரி சுரங்கமாக்கினால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்றும், விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்படுத்த முடியாது என்றும் கூறி விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இன்று மாலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டுக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.