பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா இசை மற்றும் நாட்டியக் கல்லூரியில் பாலியல் தொல்லை நடைபெறுவதாகக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மத்திய மற்றும் மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது புகாரளிக்கப்பட்டது.

இந்த நிலையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான கல்லூரியின் முன்னாள் மாணவி ஒருவர் அடையார் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து ஹரி பத்மனை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

விசாரணைக்கு ஆஜராகாமல் ஹரி பத்மன் தலைமறைவானதை அடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் வட சென்னையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த ஹரி பத்மனை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மற்ற மூவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.