சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதியுடன் கெடு முடிவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய நிலையில், பின்னர், ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக பிப்ரவரி 28ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்னும் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லை என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் இருந்து மின் அலுவலகங்களில் நேரடியாக இணைக்கும் பணி நடந்தது. 100 சதவிகிதம் இணைக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கோடு நடைபெற்று வரும் இந்த பணி வருகிற 28-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் நேற்று வரை 98.05 சதவிகிதம் பேர் ஆதாருடன் இணைத்துள்ளனர். இன்னும் 1.5 சதவீதம் பேர் மட்டுமே இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.
இறுதி கெடு முடிவடைய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் இணைக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது மின் வாரியத்தினர் தெரிவித்துள்ளார்.