j
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூடிவருகிறது. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க., இரு கம்யூ, விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்துவிட்டன. விஜயகாந்த் மற்றும் வாசன் வருகைக்காக காத்திருக்கின்றன.   தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு அவர்களும் விஜயகாந்துக்காக காத்திருக்கிறார்கள். பா.ஜ.கவும்  விஜயகாந்துக்காக காத்திருக்கிறது.  இந்த கட்சிகள் அனைத்தும் கூட்டணிக்கு வரும் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தியபடியே இருக்கின்றன.
அ.தி.மு.கவிலோ, கூட்டணி குறித்த பேச்சுக்கள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை. ஆனால் கட்சியில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களை பந்தாடிக்கொண்டிருக்கிறார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதற்கிடையே அ.திமு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் துவக்கிவிட்டார் ஜெயலலிதா.
இந்த நிலையில், மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, “முதல்வர் ஜெயலலிதா எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்” என்று சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
இன்று, அதே போல அறிவித்திருக்கிறார் டிராபிக் ராமசாமி. அது மட்டுமல்ல, தன்னை பொது வேட்பாளராக அறிவிக்கக்கோரி அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்திக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிராஃபிக் ராமசாமியை தொடர்பு கொண்டு பேசினோம்.
“ஜெயலலிதாவுக்கு எதிராக பொது வேட்பாளராக உங்களை எதிர்க்கட்சிகள் நிறுத்தும் என்று நம்புகிறீர்களா? ஒருவேளை அப்படி நின்றால் உங்களால் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என நினைக்கிறீர்களா?” என்று  அவரிடம் கேட்டோம்.
அதற்கு அவர், “எதிர்க்கட்சிகள் அனைத்துமே இந்த முறை அ.தி.மு.க. வென்றுவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கின்றன. ஆகவே ஜெயலலிதாவை எதிர்த்து நான் போட்டியிட்டால் என்னை ஆதரிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்வரும் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்.  முதல்வராக பதவி வகித்த பிறகு ஜெயலலிதா தோற்பது ஒன்றும் புதிதில்லையே..” என்றார் டிராஃபிக் ராமசாமி.
ஆக, ஜெயலலிதாவுக்கு போட்டி வலுக்குது!