டெல்லி: அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி முதலிலேயே நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, மத்திய பாஜக அரசு அக்னிபாத் என்ற ராணுவ வீரர் ஆள் சேர்ப்புக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தின் முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, கடைசியிலேயே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அக்னிவீரர் தேர்வு நடைபெற்று வந்தது.
இந்த தேர்வு முறையில் தற்போது மாற்றம் செய்துள்ளதாக ராணுவம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவு தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.‘ இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி, அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதி தேர்வு முதலில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு உடல் தகுதித் ர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும்.
மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தை குறைத்து, எளிதாக கையாளக்கூடியதாகவும் மாற்றும். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முறையில் வருகிற ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.