குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து “India: The Modi Question” என்ற டாக்குமெண்டரி படத்தை பி.பி.சி. செய்தி நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டது.
மோடி முதல்வராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் மாநில காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததற்கு அப்போதைய மோடி அரசு மீது பி.பி.சி. விசாரணைக்குழு குற்றம்சாட்டி இருந்தது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது தொடர்பாக மோடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் பிரிட்டிஷ் ஊடகத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தை இந்திய ஊடகங்கள் சில தங்கள் யூ-டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றின.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பி.பி.சி-யின் ஆவணப்படம் உள்நோக்கம் கொண்டது மட்டுமன்றி காலனியாதிக்க மனநிலையை வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து பிபிசி யூ-டியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் வேறு சில யூ-டியூப் தளங்களில் தொடர்ந்து வந்தது.
தற்போது இந்த தளங்களில் உள்ள வீடியோ மற்றும் ட்விட்டர் பதிவுகளில் உள்ள இந்த வீடியோ-வுக்கான லிங்க் ஆகியவற்றை முடக்க மத்திய அரசு அந்நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இந்த வீடியோ மீண்டும் பதிவிடுவதை தடுக்க தேவையான நடவடிக்கையை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.