மதுரை: கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள், தமிழக எல்லையோர பகுதிகளில் விதிகள் மீறி கொட்டப்படும் வழக்கில் நீதிபதிகள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தனர். தமிழ்நாட்டில் இருந்து கனிமவளம் கேரளா போகிறது, அங்கிருந்து கழிவுகள் தமிழ்நாட்டுக்கு வருகிறதா?’, அதை தடுக்க முறையான நடவடிக்கை எடுப்பதில்லையா என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.
கேரளாவில் இருந்து எடுத்து வரப்படும் மருத்துவ கழிவுகள் தமிழக எல்லையோர பகுதிகளிலும், தமிழ்நாட்டின் காடுகளிலும் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதுதொடர்பாக, வழக்குகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கபட்டு மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், முறையான நடவடிக்கை எடுக்காததால், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் , நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என கடந்த 2018 ஆண்டு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. எனவே, மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் .
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீதிபதிகள், இங்கிருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகிறது ஏன் இந்த நிலை? என கேள்வி எழுப்பினர தமிழகத்தில் எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் , பக்கத்து மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.