சென்னை: சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி ‘திராவிட மாடல்’ . திராவிடம் என்ற வார்த்தையை தவிர்த்தார். முன்னதாக ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 8 நிமிடங்கள் வரை, எம்எல்ஏக்கள் சபையின் நடுவில் வந்து, ஆளுநர் எதிரே கோஷமிட்ட நிலையில், அவர்களை அமைதிப்படுத்தி அமரவைக்க வேண்டிய சபாநாயகர், அதை முறையாக கையாளவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. முன்னதாக, கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவதற்காக காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கவர்னரை, சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர்கள் சீனிவாசன் ஆகியோர் மரபுப்படி சட்டசபைக்குள் அழைத்து வந்தனர்.
சரியாக 10.01 மணிக்கு கவர்னர் சட்டசபைக்குள் வந்தார். அவர் வருவதற்கு முன்னதாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையில் அமர்ந்து இருந்தனர். கவர்னர் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். உடனே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்ததுடன், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, அவர், உரையை வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது, தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து வந்து சபையில் உரையாற்றிக்கொண்டிருந்த கவர்னர் அருகே வந்து அவர் முன்பு கோஷங்களை எழுப்பினார்கள்.
‘வாழ்க வாழ்க தமிழ்நாடு’ வாழ்கவே’, எங்கள் நாடு தமிழ்நாடு… உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். சுமார் 8 நிமிடங்கள் அவர்கள் கையை உயர்த்தியபடி கோஷமிட்டனர். ஆனாலும் கவர்னர் அதை கண்டுகொள்ளாமல் தனது உரையை வாசித்துக்கொண்டு இருந்தார்.
ஆனால், இருக்கையை விட்டு எழுந்து வந்து கோஷமிட்ட எம்எல்ஏக்களை அமைதிப்படுத்த வேண்டிய அப்பாவு அமைதியாகவே இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதை கண்டுகொள்ளாமல், கவர்னர் தனது உரையை வாசித்தார். இதனால், கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பும் வரை நின்று கொண்டிருந்த பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள், அதன்பிறகு கோஷம் போடத்தொடங்கினார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய், மசோதாவிற்கு அனுமதி கொடுங்கள் போன்ற முழக்கங்களை எழுப்பினார்கள்.
ஒரு துண்டுச்சீட்டில் ஆங்கிலத்தில் எழுதிய வாசகங்களை கவர்னர் முன் ஏந்தி முழக்கமிட்டனர். அதற்கும் கவர்னர் எந்தவொரு ரியாக்ஷனும் காட்டாத நிலையில், அதன்பிறகு ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க.வினரும் கவர்னர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனால் இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. சபை நடுவே வந்து கோஷமிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்களை அமைதிப்படுத்துவதில் சபாநாயகர் அமைதி காத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.