டெல்லி: அரசியல், மொழி, கலாச்சாரம், திரைப்படம், விவசாயம், சீனா உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுலுடன் கமல்ஹாசன் உரையாடல் நடத்தியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தல், அதிகரித்து வரும், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, மதவேற்றுமைகள், ஜிஎஸ்டி போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு எம்.பி.யுமான, ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பாத யாத்திரையானது, கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களை கடந்து, தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி டெல்லி வந்தது. இடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டு உள்ளது. , ஜனவரி 3 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற யாத்திரையின்போது, மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது, தன்னிடம், ராகுல், நேருவின் கொள்ளுப்பேரன்… நான் காந்தியின் கொள்ளுப்பேரன். அரசியல் அமைப்பிற்கு எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் நான் தெருவில் வந்து நிற்பேன், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தேசத்திற்காகவே, எனது அரசியல் பயணம் தொடங்கப்பட்டது, எனக்காக தொடங்கவில்லை. தேசத்திற்கு நான் தேவைப்படும் நேரம் இதுதான் என்று எண்ணுகிறேன் என்று கூறியதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், , ஓய்வு நேரத்தின்போது, டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். அந்த வீடியோவை மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி தனது டிவீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது,.
அந்த வீடியோவில், கமலுடனான உரையாடலின்போது கமல்ஹாசனின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி சுவாரஸ்யமாக பதில் அளித்தார். அப்போது, தேர்தல்களை மனதில் வைத்து நான் அரசியல் செய்வதில்லை என பலர் கூறுகிறார்கள். தேர்தல்களை இன்னும் சிரத்தையுடன் கையாள வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
அதே சமயம், அரசியலில் இன்னொரு வேலையும் இருக்கிறது அதாவது மக்களை ஒன்றிணைக்க வேண்டும். மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். மக்களிடம் அன்பு செலுத்த வேண்டும்; அது முக்கியமான வேலை என கருதுகிறேன்.
மேற்கத்திய நாடுகளிடம் தலை சிறந்த உற்பத்தி நிலையங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இருந்தாலும், நம்மிடம் ஏராளமான இளைஞர்கள், பெருவாரியான மக்கள் தொகை உள்ளது. அதுமட்டுமின்றி, , தேவைக்கதிகமான வளம் உள்ளது. அதனால், நாம் சீனாவைப் போல வருவதற்கு நமக்கு மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது.
நாம் தெருக்களில் நடக்கும் போது பார்க்கிறோம். நமது குழந்தைகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். நாம் சரியான திசையில் சென்றால், உலகின் முன்னணி உற்பத்தியாளராக நம்மால் மாற முடியும். .ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களால், பெரிய அளவிலான உற்பத்தியில் சீனாவுடன் போட்டி போட முடியாது. இது தான் பரிதாபத்திற்குரிய நிலை.
நமது நாட்டில், விவசாயத்தில் பெரும் வேலைவாய்ப்பு வசதிகள் உள்ளது. அதை முறையாக கையாண்டால் நாடும் வளம் பெறும்.
நமது முதல்வர்களையும், தலைவர்களையும் எடுத்து கொண்டால், பல ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கின்றனர். நினைத்ததை செய்ய நினைக்கின்றனர். மக்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொள்கின்றனர்.
தமிழக மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது ; அவர்கள் காட்டும் அன்பும் பாசமும் மற்ற மாநில மக்களை தாண்டி என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. தமிழர்கள் அன்பு காட்டும் விதம் உண்மையிலேயே வித்தியாசமானது என்று தெரிவித்தார்.
ராகுலிடம் உரையாடும்போது கமல்ஹாசன், தமிழர்களின் கலாசாரம் மிகவும் தொன்மையானது மத நம்பிக்கையில்லாத, கடவுள் இல்லை என்று என்று சொல்பவர்கள் கூட தமிழைக் கொண்டாடுவார்கள், வணங்குவார்கள். . தொடர்ந்து விவசாயத்தை உதாசீனப்படுத்துவது தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
நான் சார்ந்திருக்கும் திரைப்படத்துறையை பற்றி கூறுகிறேன் என்றவர், ஒரு திரைப்படத்தில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கான பயிற்சி மையங்களைப் பார்த்தால் அதற்கென ஒரு ஐடிஐ கூட கிடையாது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சந்திப்பின்போது, ராகுலுக்கு கமல்ஹாசன், புலி தண்ணீர் குடித்து கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பரிசாக வழங்கினார்.
” கமல் யாரென்பதை இது பிரதிபலிக்கும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை இது குறிக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த இந்தியர், சிறந்த தமிழர் என ராகுல் காந்தி கமல்ஹாசனை பெருமிதப்படுத்தினார்.