சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு 13 கிராம மக்கள் போராடி வரும் நிலையில், நேற்று அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்த தமிழக அரசு அதற்கான முதற்கட்ட பணிகளையும் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூரைச் சுற்றியுள்ள 13  கிராம மக்கள் கடந்த 5 மாதங்களை தாண்டி போராடி  வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்ற நிலையில் நேற்று  பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எவவேலு, தங்கம்தென்னரசு, தாமோ.அன்பரசன் ஆகியோருடன்  போராட்டக்குழுவினர்  பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு சுப்பிரமணியன்,   ‘பரந்தூர் விமான நிலையம் அமைக்க ‘டெண்டர் விடப்பட்டதால் மீண்டும் எங்கள் கோரிக்கையை அரசிற்கு அழுதமாக எடுத்து செல்ல போராட்டம் நடத்தினோம்.  அரசின் பிரதிநிதிகள் உறுதியளித்ததன் பேரில், அமைச்சர்களுடனான  சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது அதன்படி  இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

விமான நிலையம் வந்தால் ஏற்பட கூடிய பாதிப்புகளை அவர்களிடத்தில் தெரியப்படுத்தினோம்.  “எங்கள் பகுதியில் விமான நிலையம் அமைத்தால் ஏராளமான் நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்பதை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே கூறினோன். அதே கருத்தை இன்று அமைச்சர்களிடம் கூறினோம். திட்ட சாத்தியக்கூறுகள் ஆராய்வதற்கு தான் உலகளவிலான டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர்கள் தெரிவித்தனர். அந்த டெண்டர் பெறும் நிறுவனம் ஆராய்ந்து கொடுக்கும் ஆலோசனையின் படியே விமான நிலையம் அமைப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை போராட்டம் செய்யாமல் ஆராய்வுக்கு வருபவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும்ல அரசிடம் உரிய தரவுகள் கொடுங்கள், நீரியல் தொடர்பான ஆய்வுக்கு IIT பேராசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு விமான நிலையம் அமைப்பது தொடர்பான அனைத்து ஆய்வுகளும் அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து உறுதியான முடிவு எடுக்கும் வரை போராட்டம் நடத்தாமல் இருங்கள் என அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில்,  அரசின் உறுதியான முடிவை அறிவிக்கும் வரை மாலை நேரத்தில் தொடர்ந்து போராடும் போராட்டம் தொடரும்.

விமான நிலையம் சாத்தியக்கூறு ஆய்வில் எங்களது கருத்துக்களை எடுத்துக்கூற வாய்ப்பாக இதனை கருதுகிறோம். ஒரு போதும் பரந்தூர் பகுதி விமான நிலையம் அமைப்பதற்கு தகுதி பெறாது. சாத்தியக்கூறு ஆய்வில் ஒருவேளை விமான நிலையம் அமைப்பதற்கு தகுதி உள்ளது என அறிவித்தால் எந்த நிலையிலும் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம்,’’

இவ்வாறு அவர் கூறினார்.