ஜெய்ப்பூர்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருந்திருந்தால் நாங்கள் பாஜகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருப்போம் என ராஜஸ்தானில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது . 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் 156 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசுக்கு 17 இடங்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஐந்து இடங்களும் கிடைத்திருக்கின்றன.
குஜராத் மாநில அரசியலை எடுத்துக்கொண்டார், 1985ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் மாதவ்சிங் சோலங்கி தலைமையில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி 149 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, தற்போதுவரை, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறி வருகிறது. 1995ம் ஆண்டு முதன்முதலாக குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிலிருந்து தற்போது 7வது முறையாக குஜராத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பாஜக 52.50 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கடந்த முறை 40 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இந்த முறை 27.28 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது. ஆம்ஆத்மி 12.92 சதவிகித வாக்குகளை பிடித்துள்ளது.
பா.ஜ.க. தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் மிகச்சாதாரணமாகே இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. உள்ளூர் பிரச்னைகளை முன்னிறுத்தி, நல்ல வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்தால் போதும் எனக் கருதியது. ஆனால் காங்கிரஸ் கட்சியனி முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. அதோடு கடந்த தேர்தலில் 77 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது 56 எம்.எல்.ஏக்களுடன் சுருங்கிப் போயிருந்தது. மீதமுள்ளவர்கள் பா.ஜ.கவுக்குச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஒரு வாரத்திற்கு பிறகு கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சி பாஜகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கும் என்று கூறியிருக்கிறார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 52.50 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், வெறும் 17 பேர் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் , 5 இடங்களை வென்ற ஆம்ஆத்மி கட்சியின் வாங்கு வங்கிகளை இணைத்தாலும் 39.30 சதவிகிதம் மட்டுமே கிடைத்திருக்கும். அப்படி இருக்கும்போது ராகுல்காந்தி கூறியிருப்பது அதிகபட்சமாகவே கருதப்படுகிறது.