காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், திராவிட கட்சிகளை மிஞ்சும் வகையில், காங்கிரஸ் கட்சி குஜராத்தில் பல்வேறு இலவச அறிவிப்புகளை அள்ளி வீசியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இங்கு தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. குஜராத் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது பாஜக 111 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 63 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த ஆண்டு டிசம்பரில் 2கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1ம் தேதி, 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொள்ள தொடங்கியுள்ள அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக போராடி வரும் நிலையில், ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.

ஏற்கனவே பாஜக அங்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அதற்கும் மேலாக ஆத்ஆத்மி கட்சி மக்களிடையே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை தன்வசப்படுத்தி வருகிறது. ஆத்ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபை போல குஜராத்திலும் ஆட்சியை கைப்பற்ற வியூகங்களை வகுத்துள்ளார். ஏராளமான இலவச அறிவிப்புகள் அள்ளி வீசி உள்ளார்.

“குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ.3,000 ஆயிரம் மின்சார செலவு, ரூ.10,000 கல்விக்கான செலவு, ரூ.5,000 சுகாதாரத்துக்கான செலவுகளை சேமிக்க முடியும். உங்கள் மாதந்தாந்திர மின்சாரக்கட்டணம் ரூ3,000 வருகிறது என்றால் இனி அது பூஜ்யமாக மாறும் நீங்கள் மாதம் 3,000 வரை சேமிக்க முடியும். இனி உங்கள் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது. அவர்களுக்கான கல்விக்கட்டணம், புத்தகச் செலவுகள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியத் தேவையில்லை. இனி அவை என்னுடைய பொறுப்பு.  உங்கள் வீட்டில் 3 குழந்தைகள் இருந்தால், நீங்கள் மாதம் 10,000 வரை கல்விக்கட்டணம் சேமிக்க முடியும். யாருக்காவது உங்கள் குடும்பத்தில் உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்களின் மருத்துவ செலவு குறித்து கவலைப்பட வேண்டாம் அதனை கேஜ்ரிவால் பார்த்துக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.  அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குஜராத் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில் 7 கோடி குஜராத் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மாற்றத்திற்கான விருப்பமாக காங்கிரசை மட்டுமே கருதுகின்றனர் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

1) எல்.பி.ஜி. சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். 2) 300 யூனிட் வரை இலவச மின்சாரம். 3) 10 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை. 4) விவசாயிகளின் 3 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி. 5) அரசு வேலைகளில் ஒப்பந்த முறை மூடப்படும். 6) வேலையில்லாதவர்களுக்கு ரூ.300 உதவித்தொகை 7) 3000 அரசு ஆங்கில வழி பள்ளி 8) கூட்டுறவு சங்கங்களில் லிட்டருக்கு ஐந்து ரூபாய்க்கு பால் மானியம் 9) கொரோனாவால் உயிரிழந்த 3 லட்சம் பேரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.