டெல்லி: துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்து பல ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த  தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், உடனே ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட்டு உள்ளது.

 கன்னியாகுமரியைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்பவர் 1992-ம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியில் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த 2.12.2002 முதல் அவரது சேவைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் 30.6.2012 அன்று ஓய்வுபெறும் வயதை அடைந்துள்ளார். தனது பணி ஒழுங்குபடுத்தப்படுவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க அரசு மறுத்துள்ளது.

இதையடுத்த பள்ளிக்கல்வித்துறை மீது அவர் சென்னை உயர்தநீதிமன்றத்தில்  கடந்த 2012ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், தொழிலாளிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017ம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித் துறைக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இதனை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை உயர்நீ திமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை 2020-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. மேலும், கண்ணனுக்கான ஓய்வூதிய பலன்களை எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், பிடிவாதமாக துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதிய பலன்களை வழக்க மறுத்த தமிழகஅரசு, உயர்நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய  மனுத்தாக்கல் செய்தது. அதையும்,  சென்னை உயர்நீதிமன்றம் இந்த 2022ம்  ஆண்டு மார்ச் 2-ந் தேதி தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, ஒரு துப்புரவு தொழிலாளர் தனது ஓய்வூதிய உரிமைகளை பெறுவதற்கு ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்து வந்துள்ளார். இந்த விஷயத்தில் தமிழகஅரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்க வகையில் உள்ளது.  தேவையில்லாமல் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விஷயத்தையும் அந்த துப்புரவு பணியாளரையும் மேலும் வழக்குகளுக்குள் இழுத்துச் செல்ல அரசும், அதிகாரிகளும்  முற்படுகின்றனர். இது தவறான நடவடிக்கை என என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டதுன் ஓய்வூதிய பலன்களை அந்த துப்புரவு தொழிலாளிக்கு வழங்க உத்தரவிட்டது.

மேலும், பள்ளிக்கல்வித்துறை விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.