சென்னை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என சென்னை காசிமேட்டில் ஆய்வு செய்த முதலமைச்சர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, பெருங்குடி மண்டலம், வார்டு-181க்குட்பட்ட குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து சென்னை,காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்
காசிமேட்டில் ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: இரவு, பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய, சிறப்பாக பணியாற்றினார்கள். பாதிப்புகள் குறித்து விடிய விடிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக புயலால பெரிய அளவு பாதிப்புகள் இல்லை.
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். புயல், மழை பாதித்த இடங்களில் இன்று மாலைக்குள் முழுமையாக மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும். புயல் சேத விவரங்கள் முழுமையாக கணக்கிட்ட பிறகு, உடனடியாக நிவாரணம் வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் உதவி கோரப்படும் என கூறினார் .