சென்னை: தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகள் இல்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது. பலருக்கு குடும்ப அட்டைகள் இருந்தும் அவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காததால், வங்கி கணக்கு இல்லை என தரவுகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி, தமிழகஅரசு, பரிசுத்தொகுப்புக்கு பதிலாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வங்கி விவரங்களை பெற்று பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், பல  குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு வங்கி கணக்குகள் இருந்தும், ஆதார் இணைக்கப்படாததால் வங்கி கணக்கு இல்லை என தரவுகள் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் .தமிழ்நாட்டில் 14 ,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு இல்லை. அவர்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காத காரணத்தால், அவர்களின் வங்கி கணக்குகள் தொடர்பான தரவுகள் இல்லை.

எனவே, கூட்டுறவு சங்கப்பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வங்கி விவரங்களை பெற்று பதிவு செய்யவும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், 2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் கொடுக்கப்பட்ட பல பொருட்கள் தரமற்ற முறையில் இருந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்த பரிசு பொருள் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் தர அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கையே குடும்ப அட்டைதார்களின் வங்கி கணக்கு ஆதாருடன் இணைக்க செய்யும் நடவடிக்கை என கருதப்படுகிறது.