மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான இன்று சுவாமி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் மீண்டும் மீண்டும், கோகுல்ராஜை தெரியாது என மறுத்து வந்த நிலை யில், அவர்மீது  குற்றவியல்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.  மேலும், சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் கூறி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அவர் சுவாதி என்பவரை காதலித்ததாகவும், இருவரும் வேறுவேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலை யில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,   யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்பட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது, உயர்நீதிமன்ற  நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சுவாதியை மீண்டும் சாட்சி கூண்டில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது. சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி கடந்த 25ம் தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிறழ் சாட்சியான சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் பல்வேறு கிடுக்கிபிடி கேள்விகளை எழுப்பினர். மேலும் வீடியோவை காட்டியும் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு சுவாதி முரணான பதில் அளித்ததுடன் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, முறையாக பதில் அளிக்காவிட்டார், சுவாமி  மீது நீதிபதி அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து வழக்கை 30ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாமி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு, சுவாதி  மீண்டும் தனக்கு எதுவும் தெரியாது என ஒரே பதிலையே கூறி வந்தார். இதனால்  கோபமடைந்த நீதிபதிகள், பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.  மேலும், வழக்கின் முக்கியத்துவத்தை அறியாமல் சுவாதி பொய்யான சாட்சி வழங்குவதாக தெரிய வருகிறது என்றும், சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.