சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகளை மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி உள்பட பல நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்தது. இந்த நிலையில், தற்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்பட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் உள்பட மொத்தம் 7 நீதிபதிகளை பல்வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.
கொலிஜியம் பரிந்துரையின்படி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும், ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த்தை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணியை, கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் ரெட்டி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதேபோல், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் கரேலை மாற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவரது பெயர் கொலிஜியம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெறவில்லை .