சென்னை: சென்னையில் உரிமம் புதுப்பிக்காத மற்றும் உரிமம் இல்லாத 70 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது வணிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக சென்னை பிராட்வே பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 70 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக தொழில் வரி மற்றும் வணிக உரிமம் பெறாமல் இருக்கக்கூடிய கடைகள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கடைகள் மீதான நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு வழங்கி யுள்ளது.
இதனடிப்படையில் அதிகாரிகள் அவ்வப்போது மண்டல வாரியாக சோதனை மேற்கொண்டு குறிப்பிட்ட கடைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றையதினம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல ஆய்வில் பிராட்வே மற்றும் நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே உள்ள பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது சுமார் 90க்கும் மேற்பட்ட கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில்வரி செலுத்தாத கடைகள், மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கடைகள், தொழில் உரிமம் புதுப்பிக்காத கடைகள், தொழில் உரிமம் இயங்கிய கடைகள் ஆகியவை கண்டறியப்பட்டு 90க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த குறிப்பிட்ட கடைகள் சென்னை மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ள வாடகையோ அல்லது நிலுவையில் உள்ள வரியையோ முறைப்படி செலுத்தினால் கடைகள் மீதான சீல் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.