சென்னை: உத்தரபிரதேச மாநிலம் காசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், தமிழக அறநிலையத்துறை சார்பில் 200 பக்தர்களை அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்தியஅரசு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் நவம்பர் 17ந்தேதி முதல் டிசம்பர் 16ந் தேதிவரை ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, இலக்கியம், பழங்கால நூல்கள் ஆன்மிகம், இசை, நடனம், கைத்தறி மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன. இதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. சென்னையில் ஆளுநர் ரவி உள்பட ஆன்மிக அமைப்பை சேர்ந்தவர்கள் , காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்பவர்களை வழியனுப்பி வைத்தனர். நாளை பிரதமர் மோடி காசியில், நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை நிர்வகித்து வரும் அரசின் இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து 200 பேரை அழைத்துச் செல்ல  நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,  20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்களை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு இணை ஆணையர்களுக்கு ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிரிப்பித்துள்ளார். காசி அழைத்துச் செல்லப்படுவோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர், இறை நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவோர் 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.

ஆன்மிகப் பயணத்தின் போது விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது எனவும், உடன் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது எனவும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டிற்கும் – காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நேற்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் தேதி வரை காசியில் நடைபெறுகின்றது.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடக்கம்: ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது…