சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்க போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியா வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே நெடுங்காலமாக தொடரும் நல்லுறவின் காரணமாக இந்தியர்களுக்கு இந்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தவிர, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சவுதி அரேபியாவில் அமைதியாக வாழ்ந்து வருவதை பாராட்டும் விதமாக சவுதி அரேபிய சாம்ராஜ்யம் இந்த சலுகையை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

விசாவுக்கான போலீஸ் அனுமதியிலிருந்து விலக்கு அளித்திருப்பதன் மூலம் விசா நடவடிக்கைகள் விரைவாக நடைபெறும் என்றும் சுற்றுலா பயண ஏற்பாடுகள் மீண்டும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு சவுதியில் குடியேறவும், வேலைவாய்ப்பு அல்லது நீண்ட கால விசா உள்ளிட்ட குடியேற்ற விண்ணப்பம் செய்ய போலீஸ் அனுமதிச் சான்றிதழ் (PCC) வழங்கப்பட்டுவருகிறது.

அரேபிய நாடுகளில் மிக அதிகமான இந்தியர்கள் சவுதி அரேபியாவில் வசித்துவருகின்றனர். கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்தியா திரும்பிய பலர் தற்போது வேலைக்காக மீண்டும் சவுதி அரேபியா செல்வது அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.