சென்னை:
விளையாட்டு வீராங்கனை உயிரிழக்க காரணமாக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மாணவி பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவர் மாணவிகள் இடையே மிகவும் பிரபலம்.
சிறப்பாக கால்பந்து விளையாடுவார் என்பதால் மாணவிகள் இடையே ரோல் மாடல் போல இவர் வலம் வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் கால் பந்து விளையாடும் போது இவருக்கு காலில் அடிக்கடி வலி ஏற்பட்டு உள்ளது. அதில்தான் அவருக்கு தசை பிடிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காலில் தசை பிடிப்பு இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். சவ்வு அவருக்கு விலகிவிட்டதாக மருத்துவர்கள் இதில் கூறி உள்ளனர்.
இதையடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதன்படியே அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சவ்வு பாதிப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவருக்கு வலி இருந்துள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகரித்துள்ளது.
திடீரென உயிரே போகும் அளவிற்கு அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் செய்யப்பட்ட சோதனையில், கால் அழுகியது கண்டுபிடிக்கப்பட்டது. சவ்வில் இருந்து திசுக்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளன. இதனால் காலை உடனே அகற்ற வேண்டும். இல்லையென்றால் மற்ற பாகங்களுக்கு பாதிப்பு பரவும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதில் ரத்தம் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் செயலிழந்துள்ளது. சிறுநீரகத்தை தொடர்ந்து மற்ற உறுப்புகள் வேகமாக அழுக தொடங்கி உள்ளன. ஈரல் மற்றும் இதயம் ஆகியவையும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதான் கடைசியில் அந்த மாணவியின் மரணத்திற்கும் காரணமாக அமைந்து உள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மருத்துவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் தலைமறைவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்க சென்றபோது மருத்துவர்கள் 2 பேரும் தலைமறைவானது தெரியவந்தது. இதைடுத்து, அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதைஅறிய, அவர்களது செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் கண்காணிப்பு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.