ருள்மிகு சாஸ்தா திருக்கோயில், நாகை மாவட்டம், இரட்டக்குடியில் அமைந்துள்ளது.

மாசுபடாத தூய்மையான சில்லென்ற காற்று. எளிமையான சின்னச் சின்ன வீடுகள், பச்சைப் பசேலென்ற வயல்கள், சிற்றோடைகள் கொண்ட சிறிய கிராமம் இரட்டக்குடி. நாகை மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் கொல்லுமாங்குடி வழியாகப் பூந்தோட்டத்தை அடுத்து இந்த கிராமம் உள்ளது. இங்கு கொலுவிருக்கும் ஐயனாரின் திருநாமம் ஆகாச சாஸ்தாவாகும். பூர்ணா, புஷ்கலாம்பாள் சமேதராய் காட்சிதரும் சாஸ்தாவின் கோயில் மிகப் பழமையானதாகும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.

சாஸ்தாவின் வலதுபுறம் பிள்ளையாரின் சிலையும் உள்ளது. எதிர்ப்புறம் பைரவரும், குதிரை அருகில் வாளுடன் வீற்றிருக்கும் வீரனின் வடிவங்களையும் தரிசிக்கலாம். அதைத் தவிர வீரனுக்கு தனிச் சந்நிதியும் உள்ளது. கோயில் அருகிலேயே திருக்குளம் உள்ளது. கோயிலின் உள்ளே மேற்புறம் கூரையில் இரு பக்கமும் துளைகள் உள்ளன. சாஸ்தா ஆகாசத்திலிருந்து இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். சில காலம் முன்பு கோயிலைப் புதுப்பிக்கும்போது அந்தத் துளைகளை மூடி விட்டார்களாம். ஐயனார் ஒரு பக்தனின் கனவில் தோன்றி, ‘நான் ஆகாச சாஸ்தா. கூரையின் மேல்புறம் துளைகள் வையுங்கள்’ என்று சொல்லி மறைந்தாராம். இப்போதும் அந்தக் கோயிலின் மேற்கூரையில் துளைகள் இருப்பதைக் காணலாம்.

கிராமத்தில் நுழைந்ததுமே நமக்குக் காட்சி அளிப்பவர் விநாயகர்தான். விநாயகர் கோயிலை அடுத்து அருகருகிலேயே பிடாரி அம்மன் கோயில், பெருமாள் கோயில் மற்றும் சிவபெருமான் கோயில்கள் உள்ளன. 30.4.2009 அன்று எல்லாக் கோயில்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. படிப்பு, வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் குடியேறிய போதிலும், சாஸ்தாவை குலதெய்வமாக வழிபடும் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்வுடன் கொண்டாடும் விழாக்கள்தான் இதுபோன்ற கோயில் திருவிழாக்கள்.
இந்த ஊருக்கு இரட்டக்குடி என்ற பெயர் வரக் காரணமான நிகழ்வு, மகாபாரதத்தில் நடந்திருப்பதற்கான சம்பவமாகக் குறிப்பிட்டு, இவ்வூர் சிவன் கோயிலில் எழுதப்பட்டுள்ளது. பாசுபத அஸ்திரம் பெற வேண்டி அர்ஜுனன் சிவனை நினைந்து கடுமையான தவம் புரிந்தார். திருவிளையாடல்கள் பல நிகழ்த்திய ஈசன் தன் பக்தனைச் சோதிக்க எண்ணி வேடுவன் வேடத்தில் வந்து தவத்தைக் கலைக்க முயன்றார். சினமுற்ற அர்ஜுனன் தனது காண்டீபத்தால் சிவனின் தலையில் அடிக்க, சிரம் இரண்டாகப் பிளவுபட்டது. உடனே, சிவன் காட்சி தந்தார்.

தேவர்களும், ‘அர்ஜுனனின் பாணம் பட்டு பிளவுபட்ட தலை அவ்வாறே இருக்க’ வேண்டினார்கள். சிவனும் அருள்பாலிக்க, அதனால் இத்திருத்தலம் இரட்டக்குடி என அழைக்கப்படலாயிற்று. மேலும் சிவன் அர்ஜுனனின் மன்னிப்பை ஏற்று, அவனுக்குப் பாசுபதாஸ்திரம் அளித்தார். இரட்டக்குடியில் கோயில் கொண்டிருக்கும் சிவனின் நாமம் சக்தீஸ்வரர். அம்பிகையின் நாமம் சக்தீஸ்வரி. சண்டிகேஸ்வரருக்கும், பிள்ளையாருக்கும் தனித் தனி சந்நிதிகளும் உள்ளன.