‘டெல்லி: உயர்ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் காரணமாக, மண்டல் கமிஷன் அறிக்கையில் சொன்ன 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்பதை உறுதி செய்து உச்சநீதி மன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இது மட்டுமின்றி, இனி ஆளும் அரசியல் கட்சிகள், தங்களது ஆதரவு வாக்குவங்கிக்கு ஏற்றவாறு, இடஒதுக்கீட்டை வழங்க முன்வரும் என்பதிலும் சந்தேகமில்லை என்பதும் தெளிவாகி உள்ளது.
மத்திய பாஜக அரசு, உயர்ஜாதி ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்தது. இதற்கு குறைந்தபட்ச வருமான தகுதியான ரூ.8 லட்சம் என அறிவித்திருந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் மத்தியஅரசின் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிராக பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த மனுக்களை தலைமைநீதிபதி தலைமையிலான 5நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
தீர்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் 5ல் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளனர். தலைமை நீதிபதி நீதிபதி லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பாட் ஆகியோர் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதனால் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உறுதியாகி உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விளக்கம் அளித்து உள்ளது. இதில் பொருளாதார ரீதியாக 10% இடஒதுக்கீடுவழங்குவதில் தவறு இல்லை, ஆனால் இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை நீக்கியது தவறு, அதனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ் ரவீந்திர பாட் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இதை தலைமை நீதிபதி யுயு லலித் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் தனியாக தீர்ப்பு வழங்காமல் பாட் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பாட் தனது தீர்ப்பில், நமது அரசியலமைப்பு சட்டம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. எதிரான இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது இந்த இடஒதுக்கீடு. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை இந்த இடஒதுக்கீடு கேள்வி கேட்கிறது. பின்தங்கிய வகுப்பினர் பெறக்கூடிய இடஒதுக்கீட்டிற்கு எதிரானதாக இது அமைந்து விடும். பொருளாதார இடஒதுக்கீட்டில் எஸ், எஸ்டி, ஓபிசி பிரிவினர் இடம்பெறாதது தவறு. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இந்த இடஒதுக்கீடு சட்ட திருத்தம் என்று தனது அதிருப்தியை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மண்டல் கமிஷன் அறிக்கை தொடர்பான வழக்கில், எந்த ஒரு மாநிலத்திலும் 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று 1992ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, பல வழக்குகளில் 50சதவிகித்திற்கு உட்பட்டே பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு (2021) மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, 50% மேல் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று என கூறி, மராத்தா இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால், தற்போது உயர்ஜாதி ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 சதவிகித இடஒதுக்கீடும், ஏற்கனவே வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பான 50% தாண்டியுள்ள நிலையில், அதை நீதிபதிகள் உறுதி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத.
கடந்த 2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால், மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீட்டு அளவு 50 சதவிகதத்தைக் கடந்தது. இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மராத்தா சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம்” என மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு , `1992-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம் என்றும், அதை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பே இல்லை. அதன்படி மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிர அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என அறிவித்தது. மேலும், மராத்தியர்களான ஓ.பி.சி மக்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு அளிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-க்கு எதிரானது என்றும் கூறியது. மராத்திய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தது.
ஆனால், தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அதாவது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் பார்க்கும் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10சதவிகிதம் கல்வி, வேலைவாய்பில் இடஒதுக்கீடு செய்தது செல்லும் என்று உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார ரீதியாக 10% இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை என்று கூறியுள்ளது.
இதுவரை பல இடஒதுக்கீடு வழக்குகளை விசாரித்துள்ள உச்சநீதிமன்றம், பல வழக்குகளில் இடஒதுக்கீட்டை ஏற்க மறுத்து ரத்து செய்துள்ள நிலையில், தற்போது உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை ஆதரித்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக, மாநில அரசுகள், தங்களது விரும்பம்போல இடஒதுக்கீடு வழங்குவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆளும் மாநில அரசுகள், வாக்குவங்கிக்காக தங்களது ஆதரவான சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை வழங்குவதில் பாரபட்சம் காட்டும் அவலம் உருவாகும் என்பதை மறுக்க முடியாது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், 50% இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு இனி புனிதமானதாகக் கருதப்படக் கூடாது எனத் தோன்றினால், SC தீர்ப்பு பண்டோராவின் பெட்டியைத் திறக்கும். ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் விரும்பும் அரசியல்ரீதியாக சக்திவாய்ந்த குழுவிற்கு இடமளிக்க அந்த% வரை நகர்த்த முடியும். #EWS என குறிப்பிட்டுள்ளது.
1993-ம் ஆண்டில் மண்டல் கமிஷன் சொன்ன 50சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்பதை பல முறை உறுதிப்படுத்தி உள்ள உச்சநீதிமன்றம் தற்போது, தனது முந்தைய தீர்ப்பை மீறும் வகையில், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று அறிவித்துள்ளது.
மண்டல் குழு தன்னுடைய அறிக்கையை டிசம்பர் 1980-ம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ‘இந்திய மக்கள் தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என மண்டல் குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த அறிக்கை அப்போதைய காங்கிரஸ் அரசார் கிடப்பில் போடப்பட்டது.
ஆனால், பின்னர், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி நாடாளுமன்றத்தில் மண்டல் குழுவின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
‘மண்டல் குழு’வின் அறிக்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு எதிராக வட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. ஆனால், தென் மாநிலங்களில் வரவேற்பு கிடைத்தது. அப்போது மாநில முதல்வராக இருந்த கருணாநிதி, மண்டல் கமிஷன் அறிக்கையை வரவேற்றதுடன், அப்போதைய பிரதமர் வி.பி.சிங்குக்கு பக்கபலமாக இருந்தார்.
மண்டல் கமிஷன் அறிக்கையை எதிர்த்து, வட மாநிலங்களில் மாணவர்கள் சிலர் தீக்குளித்தனர். அனைத்து எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ‘மண்டல் குழு’வின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவை அமல்படுத்தப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டி ருந்ததால் முட்டுக்கட்டை விழுந்தது.
மூன்று வருடங்கள் நடைபெற்ற வழக்கை விசாரித்த 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு 6 – 5 என இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை தன்னுடைய தீர்ப்பில் உறுதி செய்தது. அதன்படி இடஒதுக்கீடு 50சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் உத்தரவிட்டது. அதற்கு பிறகு ஆகஸ்ட் 25, 1993 அன்றுதான் மண்டல் குழுவின் பரிந்துரை அமலுக்கு வந்தது.
மண்டலின் நூற்றாண்டோடு இவர் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தற்போது அதற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்: அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…