சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்  அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஆங்காங்கே தண்ணீர் தேங்கினாலும், அரசு மற்றும் மாநகராட்சியின் துரித நடவடிக்கை காரணமாக மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பலான இடங்களில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பருவமழை பாதிப்புகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து இன்று  சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு தலைமையில் இந்த கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீபி சிங் பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள், மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள், இணை/துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.