சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் தெய்வநாயகர் பெருமாள் திருக்கோயில் அமைந்துளது.
மங்கள சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 35வது திருத்தலம். இந்த தலத்தை கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 2 கீமீ தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. திருநாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று. திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மஹாலக்ஷ்மியை மஹாவிஷ்ணு மணமுடிக்கும் காட்சியாய் காண தேவர்கள் தொகையாய் (மொத்தமாய்) வந்தனர் என்றும் கூறுவர்.
இக்கோயில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து வேண்டினால் பேறு கிடைக்கும். பெருமாள் திருமணம் நடந்த இடமாததால் விமானத்தின் பெயர் சோபன விமானம்.