மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையில், பசும்பொன் தேவர் தங்க கவசம் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தங்க கவசத்தை இரு தரப்பிடமும் தர மறுத்துவிட்டார். மேலும், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கவசத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் இன்று மாலை உத்தரவிட்டார்.
இந்நிலையில், தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பதற்காக மதுரை வங்கியில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசத்தை மாவட்ட வருவாய் துறையினர் பசும்பொன் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகர், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் அணிவிக்கப்பட்டது.
முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜைக்காக பசும்பொன்னுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் செல்லவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளத. சென்னை, நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார்.