சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என சிலர் நினைக்கின்றனர் அவர்களின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதிகாலை 4.10 மணியளவில் கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில், சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே கார் வெடித்து சிதறியது. இதில், அந்த காரை ஓட்டிவந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது, உயிரிழந்த முபீன் வீட்டில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு உள்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த விபத்தா? அல்லது சதிவேலையா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் பேட்டியளித்துள்ளார்.
மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்கவைத்து, பல உயிர்களை பலி வாங்க சதி செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது இறந்த நபரின் பெயர் ஜமேஷா முபின் என்றும், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய பாதுகாப்பு படையினரால் விசாரணை செய்யப்பட்டவர் என்றும், அவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்துசெய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை முற்றிலுமாக தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது, ISIS முழுமையாக கொங்கு பகுதிகளில் ஊடுருவி உள்ளனர் என தெரிவித்தார், விபத்தில் பலியான ஜமேஷா முபீன் 21ஆம் தேதி தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேடஸ்சில் IF THE NEWS ABOUT MY DEATH REACHES YOU ,FORGIVE MY MISTAKE , HIDE MY SHORTCOMING, PARTICIPATE IN MY JANASA AND PRAY FOR ME (என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வரும் நேரத்தில், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், என்னுடைய குற்றங்களை மறந்து விடுங்கள், என்னுடைய இறுதி சடங்கில் பங்கேருங்கள் என பதிவு செய்துள்ளார் , இது ISIS அமைப்பு தாக்குதலுக்கு முன்பாக பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்கியம் இது காவல்துறையிடம் உள்ளது. இது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு கொண்ட பயங்கரவாத தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது.
கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான ஒரு முயற்சிதான், நல்ல வேளையாக அந்த சம்பவம் நடைபெறவில்லை, அப்படி நடந்து இருந்தால் ஆட்சி கலைக்கப்பட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற வெடி விபத்து தற்கொலை தாக்குதல் தான் என காவல்துறை தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் தற்போதுவரை 5 நபர்களை கைது செய்துள்ள நிலையில், எதற்காக கைது செய்துள்ளோம் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என எந்த விவரங்களும் அதில் இல்லை. மேலும் இந்த விபத்து தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, அதனை வெளியிட காவல்துறை மறுப்பது ஏன் எனவும் யாரை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என குற்றம் சாட்டியதுடன், தமிழ்நாடு அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்து உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது, உள்துறை அதிகாரிகள் செயலிழந்து உள்ளனர். அவர்களை மாற்றிவிட்டு மீண்டும் முந்தைய அதிமுக திமுக ஆட்சிகளில் இருந்ததை போல நல்ல அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில், தமிழக காவல்துறை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதாகவும் மேலும் முதலமைச்சர் உட்பட நான்கு பெயரின் அன்றாட செயல்பாடுகளை மட்டுமே உளவுத்துறை கண்காணித்து வருவதாக தெரிவித்தவர், அண்ணாமலை என்ன செய்கிறார். என்ன சாப்பிடுகிறார். இட்லிக்கு சட்னி தொட்டுக் கொண்டாரா என்றே உளவு வேலை பார்ப்பதாக குற்றம் சாட்டியதுடன், ஏற்கனவே கோவை மற்றும் கொங்கு மாவட்டங்களில் பல்வேறு குற்ற செயல் தீவிரவாத செயல் பின்னணி உடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உளவுத்துறை தோல்வியின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது குறித்தும் இந்த செய்தி எவ்வாறு திரிக்கபடுகிறது, தமிழகத்தில் கூடுதலாக NIA அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றும் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் இரண்டு நாட்களில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்த துடன், ஜமேஷா முபின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கவில்லை என டிஜிபி கூறுவாரா? தீவிரவாதிகளின் கூடாரமாக கோவை மாறி வருகிறது. சிலிண்டர் விபத்து குறித்து கோயம்புத்தூர் காவல்துறையின் அறிக்கை விசித்திரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், கோவையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட வர்கள் மீது ஏன் தேச துரோக வழக்கு பதிவு செய்யவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடியாக வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.
கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன.
அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கை யாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது என்று தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை கார் குண்டுவெடிப்புக்கு நேரடியாக பதில் சொல்லாமல், பிரச்சினையை திசைதிருப்பும் நோக்கில் பதில் தெரிவித்துள்ளார். அவரது பதில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.